×

திருப்போரூர் தொகுதியில் 80 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

திருப்போரூர், மார்ச் 24: தாழம்பூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 1.30 மணியளவில் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் வந்த, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது, அவர் தனியார் ஏஜன்சி என்றும், பெரிய, சிறிய நகைக்கடைகளுக்கு, ஆர்டர்களுக்கேற்ப நகைகளை கொண்டு சப்ளை செய்வதாக தெரிவித்தார். ஒஎம்ஆரில் உள்ள காரப்பாக்கத்தில் பிரபல நகைக்கடைக்கு சப்ளை செய்து விட்டு, நாவலூரில் உள்ள ஒருவருக்கு 160 கிராம் நகையை கொடுக்க செல்வதாகவும் தெரிவித்தார். அவர்கள் காட்டிய ஆவணங்கள் சரியாக இல்லாததால் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், எஸ்ஐ பெருமாள் உள்ளிட்ட குழுவினர், அங்கு சென்று,  வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், திருப்போரூர் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வருமான வரித்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த உத்தரவின்படி அந்த வாகனம் விடுவிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி பல்வேறு இடங்களில் பறக்கும் படைகள் மூலம் வாகன சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனைகளில் பெரும்பாலானவை ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் சப்ளை செய்யும் வாகனங்களே சிக்குகின்றன. ஆனால், இந்த வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் முறையாக சோதனை நடத்துவதில்லை. வாகனங்களில் வருபவர்கள் சொல்வதை கேட்டும், அவர்கள் கொடுக்கும் ஒரு சில ஆவணங்களை சரியாக பார்க்காமலும் வாகனத்தை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் சப்ளை செய்யும் ஏஜன்சிகளை பயன்படுத்தி பணம் எடுத்து செல்ல முடியாதா என்ற கேள்விகளுக்கு தேர்தல் அதிகாரிகள் பதில் சொல்வதில்லை.  அதேபோல் நேற்று நாவலூரில் பிடிபட்ட 80 கிலோ நகைகள் உள்ள வாகனத்தை, அதிகாரிகள் திறந்து கூட பார்க்கவில்லை. வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் நேரில் வரவில்லை. போனிலேயே அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாக சொல்லி தட்டிக் கழித்து விட்டனர். உண்மையிலேயே ஊழியர்கள் சொன்னபடி அதில் நகைகள் மட்டும்தான் உள்ளதா, அந்த நகைகள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தாமலேயே விடுவித்து விட்டனர். இது பெருத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Thiruporur ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை