×

சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத முதல்வர் தன்னை விவசாயி என்று ஏமாற்றி வருகிறார்: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கடும் தாக்கு

சென்னை, மார்ச் 24: சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத முதல்வர், தன்னை விவசாயி என்று ஏமாற்றி வருகிறார் என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியுள்ளார்.
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தின் காபந்து முதல்வராக இருக்கக்கூடிய பழனிசாமியை போலி விவசாயி என பலமுறை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னார். போலி விவசாயி என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நான் விவசாயி தான், விவசாயி தான் எடப்பாடி என்று ெசால்லிக்கொண்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனு தாக்கலின் போது, வேளாண்மை இடம், அமைவிடங்கள், நில அளவை எண்கள் என்று கேட்கப்பட்ட கேள்வியில் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தான் விவசாயியா?. விவசாய நிலம் இல்லாத சிறந்த விவசாயி யார் என்றால் அவர் எடப்பாடி பழனிசாமிதான். இந்த அரசை காப்பாற்றியது பாஜ. அப்படியானால் இந்த அரசு நின்றதோ? நடத்தியதோ எடப்பாடி பழனிசாமி இல்லை.

நாங்கள் கேட்பது இந்த அரசை மத்திய அரசு ஏன் காப்பாற்ற வேண்டும். அதில் என்ன உட்காரணம் இருக்கிறது என்று சொன்னால், இந்த மாநிலத்திற்கு எதிராக இந்த மக்களுக்கு எதிராக நீட் தேர்வில் இருந்து எல்லா உரிமைகளையும், மாநில உரிமைகளை பறித்து கொள்வதற்காக இங்கே ஒரு அடிமை அரசு தேவைப்பட்டது. ஏனவே, அவர்களுக்கு சாதகமான எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றி, காபந்து பண்ணி இன்றைக்கு வரைக்கும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பதிலளித்துள்ள பாஜ தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி இது முட்டாள் தனமானது என்று கூறியுள்ளார். அதிமுக கூட்டணியினரே முதல்வர் தலைமையில் வெளியிட்ட அறிக்கையை முட்டாள் தனமானது என்று கூறியது மாநிலத்திற்கு அவமானமாகும். தமிழக முதலமைச்சர் இனிமேலாவது உண்மையை பேசவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,DMK ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...