×

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா அறுபத்து மூவர் உற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம், மார்ச் 24 :பஞ்சபூத தலங்களில் மண் தலமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் அறுபத்து மூவர் உற்சவம் நேற்று கோலகலாமாக நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் உற்சவர் ஏகாம்பரநாதர்  சிறப்பு அலங்காரத்தில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடா்ந்து, மாலை 6 மணியளவில் உற்சவர் சிம்ம வாகனத்திலும், அம்பிகை கிளி வாகனத்திலும் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். 19ம் தேதி சுவாமி, அம்பிகை இருவரும் சூரியப்பிரபையிலும், மாலை சுவாமி சந்திரப் பிரபையிலும் அம்பிகை அன்ன வாகனத்திலும், 20ம் தேதி காலை வெள்ளி பூத வாகனத்திலும், 21ம் தேதி காலை நாக வாகனத்திலும், மாலை வெள்ளி இடப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தனர். மார்ச் 22 ஆம் தேதி பிரபல உற்சவமான வெள்ளி அதிகார நந்தி சேவையிலும், மாலை ஸ்ரீ கைலாசபீட இராவண வாகனம் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

இந்நிலையில், நேற்று அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலை வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. வரும் 27ம் தேதி இரவு பங்குனி உத்திரம் உற்சவம், மறுநாள் அதிகாலை திருக்கல்யாணம் நடைபெறும். 28ம் தேதி மாலை நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம் சேவை, 29ம் தேதி காலை புருஷாமிருக வாகனம்,  மாலை பஞ்ச மூர்த்திகள் உற்சவம், 30ம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவம்,  மாலை யானை வாகனத்தில் எழுந்தருளுதலும் கொடி இறக்கம் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜெயா, செயல் அலுவலர் தியாகராஜன், ஸ்தானிகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.

Tags : Ekambaranathar Temple ,Uttara Peruvija Sixty Three Festival Kolagalam ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல்