அதிமுக வேட்பாளர் கஜேந்திரனுக்கு சவரத் தொழிலாளர்கள் ஆதரவு

கூடுவாஞ்சேரி, மார்ச் 24: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை, தமிழ்நாடு சலவை தொழிலாளர் சங்கம் முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் காட்டாங்கொளத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் போட்டியிடுகிறார். அவர், தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் முன்னேற்ற பேரவை சார்பில், சங்க மாநில பொது செயலாளர் பனையூர் ஜீ.வி.சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று ரத்தினமங்கலத்தில் உள்ள, அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இல்லத்துக்கு மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் சென்று, நேரில் சந்தித்தனர். அப்போது, கஜேந்திரனுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கிரீடம் சூட்டினர். இதனையடுத்து, அவரிடம் ஆதரவு கடிதத்துடன் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், மிக மிக வறுமைக்கோட்டின் கீழ் உள்ள முடி திருத்தும் தொழில் செய்துவரும் தொழிலாளர்களுக்கு, அரசாங்கத்தால் இலவச வீட்டுமனை வழங்கப்பட வேண்டும். மருத்துவர், நாவிதர் சமுதாயத்தை சார்ந்த வீரத் தியாகி விஸ்வநாததாசுக்கு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் மார்பளவு கொண்ட வெண்கல சிலையை நிறுவ வேண்டும். இச்சங்கத்தின் கல்வெட்டு திறந்திட அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கியின் மூலம் முடி திருத்தும் தொழில் வளர்ச்சிக்காக கடன் வசதி பெற்றுத் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக, உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என உறுதியளித்தார். அப்போது, சங்க மாநில தலைவர் பி.சுந்தர், மாநில பொருளாளர் படடூர் எஸ்.பாலமுருகன் உட்பட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

Related Stories:

>