வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்

சென்னை, மார்ச் 24: வேளச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது அதிமுக வேட்பாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி சட்டப் பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானா கடந்த 21ம் தேதி திருவான்மியூர் கடற்கரை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக வேட்பாளரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடந்த சம்பவம் குறித்து அசன் மவுலானா உடன் பிரச்சாரத்துக்கு சென்ற காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திருவான்மியூர் கடற்கரை அருகே கடந்த 21ம்தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபடியே வாக்கு சேகரித்தோம். அப்போது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த பெண் ஒருவரும், காரில் வந்தவர்களும் மோதிக் கொண்டனர். அதில் அந்த பெண் கீழே விழுந்து விபத்தில் சிக்கிக் கொண்டார். காயமடைந்த பெண்ணுக்கு காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தேவையான உதவிகளை செய்து ஆம்புலன்சை வரவழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் விபத்தில் சிக்கிய பெண்ணின் ஆடைகள் விலகி கிடந்த நிலையில் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த நாங்கள் வீடியோ எடுக்கக்கூடாது என்றும், எடுத்த வீடியோவை அழிக்க வேண்டும் என்றும் அவரிடம் முறையிட்டோம். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அவர் யாருக்கோ செல்போனில் அழைப்பு விடுத்தார். அவருக்கு ஆதரவாக வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். ஒரு பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்ததை தட்டிக் கேட்காமல், நீங்கள் எப்படி எனது ஆதரவாளருடன் வாக்குவாதம் செய்யலாம் என்று எங்களுடன் மோதலில் ஈடுபட்டார்.  அதுமட்டுமல்லாமல் அவருடன் வந்தவர்கள் எங்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த நாங்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். இது தான் நடந்தது. விபத்தில் சிக்கிய பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்தவரை தட்டி கேட்காமல் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் பெண்கள் நிலமை என்னவாகும். இவ்வாறு அவர் கூறினார்.  இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் கொடுத்த பின்பு வெளியில் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் தாமோதரன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ஆளும் கட்சியினர் காவல் துறை உதவியுடன், காங்கிரஸ் வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும்,   மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 25 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு துணை ராணுவ படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தேர்தல் அதிகாரியிடம் அளித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>