கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா பணியில்இருந்த மயிலாப்பூர் எஸ்எஸ்ஐ தற்கொலை

சென்னை, மார்ச் 24: கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா பணியில் இருந்த மயிலாப்பூர் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி (50). தமிழக காவல் துறையில் கடந்த 1993ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது மாநகர காவல் துறையில் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி சசிரேகா, தமிழ்செல்வன் (20), பிரபு (17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பாலாஜி சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காவல் துறையில் யாரும் தேவையின்றி விடுப்பு எடுக்க கூடாது என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இதனால், நோய் காரணமாக பாலாஜி விடுப்பு எடுக்க முடியாத நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், குடும்பத்திலும் சில பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 6.30 மணிக்கு பணிக்கு வந்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அவருக்கு கோயில் அருகே பணி வழங்கப்பட்டிருந்ததது. பின்னர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு 11 மணிக்கு மிகவும் சோர்வாக சென்றுள்ளார்.

அங்கு, குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அவரது படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டார். படுக்கை அறைக்கு சென்ற தந்தை வெகு நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மகன் பலமுறை கதவை தட்டியும் பாலாஜி கதவை திறக்க வில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போது, தந்தை பாலாஜி மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அவரது மகன்கள் மற்றும் மனைவி அதிர்ச்சியடைந்து கதறி அழுது துடித்தனர்.இதுகுறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்னையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>