×

சிவகங்கை மாவட்டத்திற்கு 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் இல்லை

சிவகங்கை, மார்ச் 24:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு விடிவுகாலம் பிறந்தது. ஆனால் அதிமுக ஆட்சி வந்த பிறகு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வில்லை. கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் இத்திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்காமல் ஆட்சி முடியப்போகும் நிலையில் கடந்த 5ம் தேதி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இம்மருத்துவமனைக்கு போதிய நவீன வசதி, அனைத்து துறை மருத்துவர்கள் இன்றி இன்னும் மதுரை அரசு மருத்துவமனைக்கே நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்பப்படும் அவல நிலை உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிவகங்கை நகருக்கான பாதாள சாக்கடை திட்டம் இதுவரை முடிவடையாமல் இழுபறியில் கிடக்கிறது.

திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கான சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது. இதில் முதன் முதலாக சாலைகள் போடப்பட்ட கிராமங்களும் அடக்கம். ஆனால் அதிமுக ஆட்சியில் கிராமச்சாலைகள் பயணம் செய்ய முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாய் உள்ளன. சிவகங்கை புறவழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தற்போது வரை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரை-தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது, சிவகங்கை ரயில்வே மேம்பாலம், திருவாரூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், ஸ்பைசஸ் பார்க் என மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, காங்கிரஸ் சார்பில் நிறைவேற்றப்பட்டவையாகும். திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது,‘சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு சாலை, கட்டமைப்பு வசதி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. திமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான திட்டமான மருத்துவக்கல்லூரி, நகராட்சி கட்டிடம், மத்திய அரசின் மூலம் கொண்டு வந்த ரயில்வே மேம்பாலம், தொண்டி சாலை விரிவாக்கம் என இவைகள் சிவகங்கை நகரின் முகத்தோற்றத்தை மாற்றி வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சி மட்டுமல்ல அதற்கு முந்தைய திமுக ஆட்சிகளிலும் சிவகங்கை மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது, குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டது என அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் எந்த உருப்படியான திட்டமும் இம்மாவட்டத்தில் செயல்படுத்த வில்லை. அதிமுக மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து வாயே திறப்பதில்லை. நிழற்குடை, கழிப்பறை உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகம் செய்யும் பணிகளை செய்துவிட்டு அதை சாதனையாக கூறி வருகின்றனர்’என்றார்.

Tags : Sivagangai district ,AIADMK ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி