×

தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம் பி.எல்.ஓ.க்கள் நியமனத்தில் பிரச்னை

கோவை, மார்ச்.24: கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரிகள் நியமன விவகாரம் பூதகரமாகியிருக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டீ.ஓ. செந்தில் அரசன், 3 மாதம் முன் மாநகராட்சி உதவி கமிஷனராக பணியாற்றியவர். இவர் பணி நியமனம், பணியிட மாற்றத்தில் முறைகேடு செய்திருப்பதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் தரப்பட்டது. இவர் மீது புகார் தொடர்பாக விசாரணை நடக்கிறது. தொண்டாமுத்தூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி கடந்த 3 ஆண்டாக பணி ஓய்வு பெற்றும் பணி நீட்டிப்பில் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் இவர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பணியிடத்தில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக மாநகராட்சி உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 307 ஓட்டுச்சாவடிகள் இருக்கிறது. இந்த ஓட்டுச்சாவடிகளுக்கான அலுவலர்கள் நியமனம் நடந்தது. 307 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.) நியமனத்திலும் பல்வேறு சர்ச்சை, குளறுபடிகள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பெண்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் பணியாற்ற விரும்பவில்லை என தெரிகிறது. சில பெண் அலுவலர்களை கட்டாயப்படுத்தி இடம் மாற்றம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலாந்துறை, மத்வராயபுரம், ஆர்.எஸ்.புரம், கரும்புக்கடை பகுதியில் பணியாற்றும் பி.எல்.ஓ.க்கள் சிலரின் நியமனம் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED டோல்கேட் அவசரகால வழி வசூல் மையத்தை அகற்ற வேண்டும்