கோவை கரும்புக்கடை பகுதியில் அமைச்சர் வேலுமணி வாக்கு சேகரிப்பு

கோவை,  மார்ச் 24:  கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த 19ம் தேதி முதல் சுண்டக்காமுத்தூர்,  கோவைப்புதூர், குளத்துப்பாளையம், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் கரும்புக்கடை பகுதியில் வாக்கு  சேகரித்தார். அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.  பின்னர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு  பிறகு அதிமுக ஆட்சியை கலைக்கும் முயற்சி நடந்தது. இதை, நானும், அமைச்சர்  தங்கமணியும் முறியடித்தோம்.  அதனால் என்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி  வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில், இத்தொகுதி மக்களுக்கு தேவையான  அனைத்து அடிப்படை வசதிகளையும்  செய்து கொடுத்தோம். மளிகை பொருட்கள், சத்து  மாத்திரை, கொரோனா தடுப்பு உபகரணங்கள் என தேவையான எல்லா பொருட்களையும்  தொய்வின்றி வழங்கினோம். ஆனால், கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில்  மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யாத பலர், உங்கள் முன் வாக்குகேட்டு  வருகிறார்கள். அவர்களை, நீங்கள் அடையாளம் காண வேண்டும். ஜாதி, மத  பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக உதவி செய்து வருகிறது.  இது, மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. எந்தவிதமான விமர்சனம்  எழுந்தாலும், எங்களது மக்கள் பணி தொடரும்.

அதிமுக தேர்தல்  அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கடந்த 10  ஆண்டுகளில் நாங்கள் செய்த பல திட்டங்களை, உங்களிடம் தைரியமாக எடுத்துக்கூறி  வாக்கு கேட்கிறோம். இது, வேறு யாராலும் முடியாது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அமைச்சருக்கு  ஆதரவாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தமிழ்நாடு ஹஜ்  கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜபார், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவி  மரியா உள்பட பலரும் வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

>