திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை முறையாக பராமரித்திட வேண்டும்: பொது பார்வையாளர் அறிவுறுத்தல்

திருவாரூர், மார்ச் 24: திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை முறையாக பராமரித்திட வேண்டும் என தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் ராம்லஹான்பிரஷாத்குப்தா தெரிவித்துள்ளார். திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை பராமரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகமான ஆர்டிஓ அலுவலகத்தில் தொகுதிக்கான பொது பார்வையாளர் ராம்லஹான்பிரஷாத்குப்தா மற்றும் தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் மயங்க்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்திரன், உதவி அலுவலர் நக்கீரன் மற்றும் அலுவலர்கள், வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பொது பார்வையாளர் ராம் லஹான் பிரஷாத் குப்தா கூறியதாவது, எம்எல்ஏ பொதுத்தேர்தல்-2021ஐ முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவினங்களை முறையாக பராமரித்திட வேண்டும். அனைத்து செலவினங்களையும் தனியாக வங்கி கணக்கு தொடங்கி அந்த வங்கி கணக்கிலிருந்து பரிமாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு முறையான ஆவணங்கள் பராமரிக்க வேண்டும். அந்த வகையில், செலவினங்களுக்கான விலைப்புள்ளி அடங்கிய பட்டியல்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பிரசாரங்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

எனவே இந்திய தேர்தல் ஆணையம் கூறும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடுமாறு வேட்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ராம் லஹான் பிரஷாத் குப்தா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>