உங்கள் பிரார்த்தனை என் உயிரை மீட்டுள்ளது தொகுதி மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ் உருக்கம்

திருவாரூர், மார்ச் 24: நன்னிலம் தொகுதி வாக்காளர்களுக்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என குடவாசலில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களிடம் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியத்தில் நேற்று ஆத்தூர், கிள்ளியூர், சுரைக்காயூர், திருப்பாம்புரம், செருகுடி, வடுகக்குடி, திருவிழிமழலை, அண்ணியூர், வடமட்டம், பரவாக்கரை, சற்குணேஸ்வரபுரம், கடலங்குடி, கூந்தலூர், மணவாளநல்லூர், தேதியூர், எரவாஞ்சேரி, மருத்துவக்குடி, விஷ்ணுபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக உங்கள் முன் நிற்கிறேன். இப்படி நான் நிற்பது ஒரு அதிசயமான நிகழ்வு. நான் உயிர் பிழைப்பேனா என்று அஞ்சிய நிலையில் நன்னிலம் தொகுதி வாக்காளர்கள் எனக்காக செய்த பிரார்த்தனை என்னுடைய உயிரை மீட்டுள்ளது. அந்த வகையில் எனது உயிரை மீட்டுக் கொடுத்த உங்கள் அனைவரின் பாதங்களை தொட்டு வணங்குவதுடன் இந்த தொகுதியின் பொதுமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். அதுபோல் உங்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராகவும் இருப்பேன். கடந்த 2 முறை என்னை வெற்றி பெற செய்தீர்கள். மீண்டும் உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும்.

பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2,500ஐ வழங்கிய முதல்வர் விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் கல்விக் கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 காப்பு தொகை, ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர், வாஷிங்மெஷின் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின்னால் உடனடியாக நிறைவேற்றிட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். வாக்கு சேகரிப்பின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>