×

முத்துப்பேட்டை-திருவாரூர் இடையே நேரடி பஸ் வசதி 24 ஆண்டுகளாக எதிர்பார்க்கும் மக்கள் கோரிக்கை நிறைவேறுமா?

முத்துப்பேட்டை, மார்ச்24: முத்துப்பேட்டை சுற்றுலாதலங்கள் நிறைந்த இயற்கை அழகுக்கு பஞ்சமில்லாத ஊர். திருவாரூர் மாவட்டத்தில் கடைசி ஊரான முத்துப்பேட்டை, ஒரு பக்கம் தஞ்சை மாவட்டம், மறுபக்கம் நாகை மாவட்டம், மறுபக்கம் இந்தியாவின் தெற்கு எல்லை கடல்பகுதி என கடைசியாக அமைந்திருக்கும் ஒரு சிறிய நகர்தான். ஆனால் ஒரு பெரிய நகருக்குள்ள அனைத்தும் இப்பகுதியில் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்த ஊரை தாலுகாவாக 2011ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு அறிவித்தது. அதனை அடுத்து வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. அதேபோல் பேரூராட்சியாக இருக்கும் இந்த ஊர் விரைவில் நகராட்சியாகவும் மாறவும் உள்ளது.

இந்த ஊருக்கு சிறப்பை சேர்க்கும் வகையில் ஆசியாவிலேயே பெரிய காடான சுனாமியை தடுத்தும் கஜா புயலை தாங்கிய மிகப்பெரிய அலையாத்தி காடுகள் படர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்ந்த லகூன் தீவுகள், தொண்டியக்காடு மணல் திட்டு, மன்னாரான் தீவு, உதயமார்த்தாணடபுரம் மற்றும் தொண்டியக்காடு பறவைகள் சரணாலயங்கள் என சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும், ஜாம்புவானோடை தர்கா, தில்லைவிளாகம் ராமர் கோயில், இடும்பாவனம் கற்பகநாதர் கோயில், துளசியாபட்டிணம் அவ்வையார் கோயில், கோவிலூர் பெரியநாயகி அம்பாள் கோயில், பேட்டை சிவன் கோயில்கள் போன்ற சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் நிறைந்து உள்ளன. அது மட்டுமல்லாமல் சுங்க இலாகா, வனத்துறை, பொதுப்பணித்துறை அலுவலகங்களும், தேசிய வங்கிகளும் உள்ளன.

இப்படி இந்த வசதிகள் நிறைந்த இந்த ஊரிலிருந்து மாவட்ட தலைநகர் திருவாரூக்கு செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். திருவாரூக்கு செல்ல திருத்துறைப்பூண்டி வழியாக அல்லது மன்னார்குடி வழியாகத் தான் செல்ல வேண்டும். இங்கிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு நேரடி பஸ்கள் ஏராளமாக உள்ளன. பாண்டிச்சேரி, கோவை போன்ற ஊர்களுக்கு கூட நேரடி பஸ் வசதிகள் உள்ளன. 1997ல் மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருவாரூக்கு பஸ் இல்லாதது ஊரின் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அரசு சம்மந்தப்பட்ட வேலைகளுக்கும் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை போன்றவைகளுக்கு செல்லவும் மிகவும் சிரமமாக இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் பலமுறை பஸ்கள் விட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் பெயரளவில் பெருகவாழ்ந்தான் கோட்டூர் வழியாக திருவாரூர் சென்ற அந்த ஒரே பஸ்சும் தற்போது வருவதில்லை. இது இப்பகுதி மக்களை மேலும் கவலை அடைய வைத்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி கொண்டேதான் இருக்கிறோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களுக்கு செல்ல 3 பஸ்களில் ஏறி திருவாரூர் செல்ல வேண்டி உள்ளது. எனவே காலதாமதப்படுத்தாமல் உடனே பஸ் வசதியை ஏற்படுத்திட வேண்டும் என்றனர். 1997ம் ஆண்டு நாகை மாவட்டத்திலிருந்து திருவாரூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளாகியும் முத்துப்பேட்டையிலிருந்து மாவட்ட தலைநகரான திருவாரூருக்கு நேரடி பஸ் இல்லாதது ஒரு வேதனையான விஷயம் அதே நேரத்தில் இந்த கோரிக்கை தற்போதாவது நிறைவேறுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags : Muthupet ,Thiruvarur ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...