பேராவூரணி நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவேன் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதி

பேராவூரணி, மார்ச் 24: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார், நான் வெற்றி பெற்றவுடன் உடனடியாக பேராவூரணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதியளித்தார். பேராவூரணி கேகே நகர், பாந்த குளம், எம்ஜிஆர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் இளைஞரணி மற்றும், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் அசோக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியது: பேராவூரணி பேரூராட்சி தலைவராக பத்தாண்டுகள் பணியாற்றியபோது இந்த பகுதியில் சிறுசாலைகள், குடிதண்ணீர் பிரச்னை தீர குடிநீர் பைப்புகள், உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி உள்ளேன். பேராவூரணி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

உங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த நேரத்திலும் என்னை அணுகி உங்கள் தேவைகளை கூறலாம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார், அந்தத் திட்டங்களை செயல்படுத்தி நாம் எல்லோரும் பயன் பெற உதயசூரியனுக்கு நீங்கள் அனைவரும் வாக்களித்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் திமுக தொண்டர்களும், பொறுப்பாளர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வெற்றிபெற இரவு பகல் பாராது பணியாற்ற வேண்டும் என்றார். வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், இளைஞர் அணியைச் சேர்ந்த தென்னங்குடி ராஜா, சாத்தப்பன், முன்னாள் கவுன்சிலர் முகமது பாருக், தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீத் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தராஜ், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>