×

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலை முன்னிட்டு செலவு கணக்குகளை சமர்ப்பிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிப்பது தொடர்பாக வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் நிமா ஷெரிங் ஷெர்பா முன்னிலையில், கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் ரத்னா தெரிவித்ததாவது: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் தெரிவித்துள்ளவாறு நாளை (25ம் தேதி), 30ம் தேதி மற்றும் ஏப்ரல் 4ம் தேதி ஆகிய நாட்களில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மூன்று கட்டமாக அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (முதல்தளம்) தேர்தல் செலவின பார்வையாளரின் முன்னிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

 எனவே அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முகவர்கள் தவறாது ஆஜராகி தேர்தல் செலவின அறிக்கையை அனைத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறும், செலவினங்களில் எவ்வித விடுதல்களுமின்றி முழுமையாக செலவினம் தொடர்பான கணக்கு அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, ஆர்டிஓக்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), தேர்தல் தாசில்தார் அமுதா மற்றும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ariyalur Collector's Office ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24...