×

கொள்ளிடம் பகுதியில் வயல்களில் ஆட்டுக்கிடை போடும் பணி தீவிரம்: மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் ஆர்வம்

கொள்ளிடம், மார்ச் 24:கொள்ளிடம் பகுதியில், தற்போது தரிசாக கிடக்கும் விளைநிலங்களில் ஆட்டுக்கிடை போடும் பணியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எடமணல், வடகால், கட வாசல், திருக்கருக்காவூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த விளைநிலங்கள் அறுவடை முடிந்து தரிசாக உள்ளது, இப்பகுதி கடைமடை பகுதியாக இருப்பதால் விவசாயிகள் மழை பொழிந்தால் மட்டுமே வருடத்திற்கு ஒருமுறை சம்பா நெற்பயிர் சாகுபடியை செய்ய முடியும். தற்பொழுது கோடை காலமாக இருந்து வருவதால் தங்கள் விளைநிலங்களில் ஆட்டு கிடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான ஆடுகள் மேய்ச்சலுக்காக கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அறுவடை முடிந்து விட்டதால் மேய்ச்சலுக்காக ஆடுகளின் உரிமையாளர்கள் கொள்ளிடம் பகுதிக்கு ஓட்டி வந்து உள்ளனர். அதனை விவசாயிகள் பயன்படுத்தி தங்கள் வயல்களில் ஆட்டுக்கிடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டு கிடை போடுவதால் மகசூல் அதிகரிக்கும். மேலும் பூச்சி தாக்குதல் இருக்க வாய்ப்பில்லை. ஆட்டுக்கிடை போட்டால் அந்த ஆண்டே பலன், மாட்டுக்கிடை போட்டால் மறு ஆண்டு பலன் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார். இதற்கு ஏற்றார்போல் ஒருசில விவசாயிகள் தொன்று தொட்டி இந்த ஆட்டுக்கிடை போடும் பணியை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொள்ளிடம் கடைமடை பகுதியாக இருப்பதால் நெற்பயிரை தவிர மாற்று பயிர் செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே வரும் ஆண்டு சம்பா சாகுபடிக்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்பொழுது ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளை செம்மரி ஆடுகள் அதிகமாக வருவதால் அவற்றைப் பயன்படுத்தி வயலில் ஆட்டுக்கிடை அமைத்து வருகிறோம். ஆட்டுக்கிடை கட்டுவதன் மூலம் விளைநிலங்களின் ஆட்டு சாணம் மற்றும் கோமியம் விளைநிலங்களில் விழுவதால் இயற்கை உரமாக இருந்து மண் செழுமையாக காணப்படும். இதனால் ரசாயன உரங்களை பயன்படுத்த தேவையில்லை. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். இதனால்சம்பா நெற்பயிர் சாகுபடி சிறப்பான விளைச்சலை அளிக்கும். இதனால் கொள்ளிடம் பகுதியில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது வருகிறது என்றனர்.

Tags : Kollidam ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி