×

ராஜபாளையம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராஜபாளையம், மார்ச் 23: ராஜபாளையம் அருகே, முகவூர் வழியாக சேத்தூர் பேரூராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் உடைப்பு எற்பட்டு மாதக்கணக்கில் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. முகவூர் விவசாய கூட்டுறவு வங்கி எதிரில், முகவூர்-செட்டியார்பட்டி செல்லும் சாலை, தனியார் மருத்துவமனை முன்பு என மூன்று இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. முகவூர் காமராஜர் சிலையில் இருந்து விவசாய கூட்டுறவு வங்கி வரை சுமார் 300 மீட்டருக்குள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்புகள் உள்ளன. இதனால், புதியதாக பதிக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பாதிக்கப்படுகின்றன. இது குறித்து செட்டியார்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளிக்கப்பட்டது. இதற்கு, ‘மாற்று பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்து ஒராண்டு கடந்து விட்டன. இன்று வரை நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

இது குறித்து செட்டியார்பட்டி மணிகண்டன் கூறுகையில், ‘உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. குழாய்களின் ஏற்படும் உடைப்பால் தாமிரபரணி குடிநீர் வீணாகி வருகிறாது. இது குறித்து சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்தால், இது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. குடிநீர் வாரியத்திடம் புகார் அளியுங்கள் என்கின்றனர்.  அவர்களிடம் பேசினால், சம்மந்தப்பட்ட பொறியாளரிடம் புகார் அளியுங்கள் என பட்டியல் நீள்கிறது. மழைநீரை சேமிப்போம் என கூறும் மத்திய, மாநில அரசுகள், இங்கு  பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை இல்லை. இதே நிலை நீடித்தால் செட்டியார் பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!