×

மூடிய தொடக்கப்பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் காரியாபட்டி அருகே பரபரப்பு

காரியாபட்டி, மார்ச் 23: காரியாபட்டி அருகே, தொண்டு நிறுவனம் நடத்தி மூடிய பள்ளியை, அரசு ஏற்று நடத்தக்கோரி, வீடுகளில் பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரியாபட்டி அருகே உள்ள பெரியபுளியம்பட்டி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வந்தது. இப்பள்ளியை எட்டு ஆண்டுகளுக்கு முன் நடத்த முடியாமல் மூடிவிட்டனர். இந்த பள்ளியை தமிழக அரசு எடுத்து நடத்தக்கோரி, கடந்த 8 ஆண்டுகளாக கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவு, கல்வித்துறை உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கிராம மக்களுக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kariyapatti ,
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி