15 நாட்களாக குறையாமல் உள்ளது வைகை அணை நீர்மட்டம் 64.48 அடி குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி, மார்ச் 23: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களாக குறையாத ஒரே நிலையில் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்வரத்தும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் குறையவில்லை.

இந்நிலையில், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டு, இருப்பில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் தற்போது 64.48 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணை நீர்மட்டம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஒரே அளவில் நீடித்து வருகிறது. வைகை அணையில் இருந்து தற்போது குடிநீரக்காக மட்டுமே 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் போதுமான நீர்இருப்பு உள்ளதால் மதுரை மாநகரில் வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>