×

மாவட்டம் முழுவதும் 1,679 வாக்குச்சாவடிகள் அமைப்பு

சிவகங்கை, மார்ச் 23:  சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானமாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காரைக்குடியில் 345, திருப்பத்தூரில் 334, சிவகங்கையில் 348, மானாமதுரையில் 321 என மொத்தம் ஆயிரத்து 348 வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்நிலையில் 1050க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள இடங்களில் வாக்குசாவடிகளை 2ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் காரைக்குடி தொகுதியில் 98வாக்குசாவடிகளும், திருப்பத்துர் தொகுதியில் 76 வாக்குசாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 79 வாக்குசாவடிகளும், மானாமதுரை தொகுதியில் 77வாக்குசாவடிகளும் சேர்த்து 331வாக்குசாவடிகள் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் 330 வாக்குசாவடிகள் ஏற்கனவே வாக்குசாவடி உள்ள வாளாகத்திற்குள்ளேயே உள்ள கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடி மட்டும் வேறு இடத்தில் அமைந்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 679 வாக்குசாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின் சப்ளை, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது, தேர்தல் காலத்தில் மட்டுமல்ல வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பரில் வாக்குச்சாவடிகள், வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடக்கும். வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்யப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...