×

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல அமைச்சர்களுக்கு சிறை மதுரையில் வைகோ பேச்சு

மதுரை, மார்ச் 23: ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல அமைச்சர்கள் சிறையில் தான் இருப்பார்கள் என்று மதுரையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசினார். மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி மதிமுக சார்பில் புதூர் பூமிநாதன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று மதுரை செல்லூரில் பிரசாரம் துவக்கி, ஆழ்வார்புரம், மதிச்சியம், ஓபுளாபடித்துறை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்களில் தெற்கு கோபுரம் மிக உயரமானது. இதில் நின்று பார்த்தால் மதுரை நகரமே துல்லியமாகத் தெரியும். அதுபோன்று நமது வேட்பாளர் புதூர் பூமிநாதன் மக்களோடு பழகி, அனைவரும் நன்கறிந்தவர். மக்கள் பிரச்னைக்காக சிறை சென்றவர். இவரை வெற்றி பெற செய்தால், உங்களுக்காக உழைப்பார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். டாக்டராகும் ஆசையில் இருந்த நமது மாணவ, மாணவிகள் மத்தியில் நீட் தேர்வை கொண்டு வந்து அவர்களின் கனவை அழித்து விட்டனர். பலரும் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசுதான். நீட் தேர்வுக்கு எதிராக 2 முறை சட்டம் நிறைவேற்றியதாக, எடப்பாடி பழனிசாமி மோசடி செய்து விட்டார்.

தமிழக அமைச்சர்கள் கோடி, கோடியாக கொள்ளையடித்து வைத்துள்ளனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிச.22ம் தேதி கவர்னரை நேரடியாக சந்தித்து மோசடி புகார் அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ், வரவுக்கு மீறி ரூ.2 ஆயிரம் கோடி வரை சொத்து சேர்த்துள்ளார். இதுபோன்று 8 அமைச்சர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 200க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல அமைச்சர்கள் சிறையில் தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Waiko ,Madurai ,
× RELATED திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது: வைகோ பேட்டி