×

சட்டமன்ற தேர்தலையொட்டி பதட்டமான இடங்கள் தீவிர கண்காணிப்பு இயல்பாக வாக்குப்பதிவு நடக்க நடவடிக்கை

திண்டுக்கல், மார்ச் 23: சட்டமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குரிய இடங்களை முழுமையாக கண்காணிக்க தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முழு வீச்சில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. போலீசார், தேர்தல் பிரிவு வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே போலீசார் சார்பில் மாவட்டத்தில் பிரச்னைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்படும் கிராமங்கள், சாதி, மத ரீதியாக பிரச்னைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஸ்டேசன் வாரியாக அந்த ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்னைக்குரிய கிராமங்கள், நபர்கள், ரவுடிகள் லிஸ்ட் சேகரிக்கப்பட்டது. ஏற்கனவே தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதா அல்லது என்ன பிரச்னைகளுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் 142 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கூடுதல் கண்காணிப்பிற்குள் வந்துள்ளன. தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், போலீசார் சார்பில் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை எடுப்பது, பிரச்னைக்குரிய கிராமங்கள் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் சார்பில் அதிக வாக்குப்பதிவு மற்றும் குறைவான வாக்குப்பதிவு இடங்கள் இரண்டுமே பிரச்னைக்குரியதாகவும், பதட்டமானவையாகவும் கணக்கில் எடுத்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். இங்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு, மைக்ரோ அப்சர்வர் நியமனம், வெப் கேமரா மற்றும் வாக்குச்சாவடி முன்னேற்பாடு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற இடங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் மற்ற இடங்களை போலவே வாக்குப்பதிவு நடப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Assembly elections ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா