சேலத்தில் ராணுவ உதிரிபாக தொழிற்சாலை ஜவுளி பூங்காவால் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் தீவட்டிப்பட்டியில் முதல்வர் பேச்சு

காடையாம்பட்டி, மார்ச் 23: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டியில், ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஒருமித்த கருத்தோடு மிகப்பெரிய கூட்டணி அமைத்து இருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் எங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் வாரிசுகள் கிடையாது. தமிழக மக்களையே வாரிசுகளாக பார்த்தார்கள். ஓமலூர் தொகுதியில் சாலைகள், மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஓமலூர் தொகுதியில் குடிமராமத்து திட்டத்தால், அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகிறது. வருண பகவான் கருணையால் மேட்டூர் அணை தொடங்கி, அனைத்து அணைகளும், ஏரிகளும் நிரம்பி உள்ளன. குடிநீர் பிரச்னை என்பதே இல்லை. ஆட்சி வருவதற்கு இதுவே இறைவன் கொடுத்த வரம். விவசாயம் செழிக்கிறது.தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக, 304 தொழிற்சாலைகள் தொடங்க முன்வந்து, தற்போது 27 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும் போது 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சேலத்தில் ராணுவ உதிரி பாக தொழிற்சாலை, ஜவுளி பூங்கா வர உள்ளது. இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மக்களின் எழுச்சியை பார்க்கும்போது, அதிமுக நிச்சயம் வெற்றி அடையும்.

அதிமுக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததால் தான், நான் முதலமைச்சர் ஆனேன். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, அதைப் போலவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அண்ணா மறைந்தபோது கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது போல, ஜெயலலிதா மறைந்தபோது எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதலமைச்சர் பதவிக்கு வந்த பின்னரும், எப்போதும் போல சேலத்தில் கட்சி அலுவலகத்திற்கு வருகிறேன். தொண்டர்களிடமும், பொது மக்களிடமும் பேசி பழகி வருகிறேன். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, என் தலைமையிலான அரசு, ஆட்சியில் இருக்கும்போதே ₹12 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிக்கு தான், முதலமைச்சர் மாவட்டம் என்ற பெயர் உள்ளது. நமது மாவட்டத்திற்கு முதலமைச்சர் மாவட்டம் என்ற பெயர் மீண்டும் வருவதற்கு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.பிரசாரத்தின் போது, முன்னாள் அமைச்சர் செம்மலை, ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>