சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையால் பணப்புழக்கம் குறைந்தது

நாமக்கல், மார்ச் 23:நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் சோதனையால் வியாபாரிகள், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணத்தை எடுத்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால், பணப்புழக்கம் குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு  பண பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்துக்கு அதிகமான பணம், வெள்ளி பொருட்கள், சேலைகள், வேட்டிகள், தங்கம் உள்ளிட்டவற்றை எடுத்து செல்பவர்களிடம், அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தேர்தல் பறக்கும்படையினர் கெடுபிடி காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், பணத்தை வெளியில் எடுத்து செல்வதில்லை. இதனால் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

சாலையோர கடைகள், நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள், தங்களது கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தை வீட்டிற்கும், வங்கிக்கும் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, மருத்துவமனைக்கு செல்லும் போதும், திருமண விசேஷங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க வெளியூர்களுக்கு செல்லும் போதும், குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை கொண்டு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பொதுமக்களிடையே, பணப்புழக்கம் முற்றிலும் குறைந்துள்ளது.

Related Stories:

>