×

கோவை மாவட்டத்தில் 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

கோவை, மார்ச் 23: கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 75 சதவீதம் பேர் உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வீதியில் 3 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 11 பகுதியும், மாநகராட்சி பகுதிகளில் 7 பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் உள்ள இடங்கள் காரமடை, செட்டிப்பாளையம், சூலீஸ்வரான்பட்டி, கன்னம்பாளையம், நீலாம்பூர், சோமனூர், கல்லாம்பாளையம், ஜோதிபுரம், என்.ஜி.ஜி.ஒ. காலனி, பிரஸ்காலனி, வடமதுரை, வங்கிகாலனி, கொளத்தேரி சாலை, ரங்கநாதபுரம் 2 வது வீதி, ஐஸ்வர்யா அவென்யூ, திருவாசம் வீதி, விநியாகக் கார்டன், விஸ்வநாதபுரம் ஆகும். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுவது போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : Coimbatore district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...