ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

ஈரோடு, மார்ச் 23:  ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி பிரசாரத்தின் போது உறுதி அளித்தார்.ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சு.முத்துசாமி, மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அவர் நேற்று மூலப்பாயம், நேருஜி வீதி, சாந்தி நகர், விவேகானந்தா வீதி, பாசுமை பாரதி நகர், காந்தி நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கு கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. மக்களின் எண்ணங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார். அதை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் அறிவித்துள்ளார்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதுமட்டுமல்லாமல், மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புறநகர் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட், அதேபோல், வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாநகரில் கூடுதல் மேம்பாலமும், மேற்கு தொகுதியில் புதிய மேம்பாலமும் அமைக்கப்படும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எனவே, தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, வேட்பாளர் முத்துசாமி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, டெலிபோன் நகர், வைகை நகர், வி.கோ.வீதி போன்ற பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, பிரசாரம் மேற்கொண்ட அனைத்து பகுதிகளிலும் முத்துசாமிக்கு கட்சியினரும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

Related Stories:

>