×

வேலூர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு கலெக்டரும் நேரில் ஆய்வு

வேலூர், மார்ச் 23: வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், தேர்தல் காவல் பார்வையாளரும் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல், மனுக்கள் பரிசீலனை மற்றும் மனுக்களை வாபஸ் பெறுதல் என்ற நடைமுறைகள் முடிந்து வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 1,789 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 364 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வேலூர் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 357 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறயைில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை தேர்தல் காவல் பார்வையாளர் மாயங்க் வஸ்தவா நேற்று காலை திடீரென வந்து பார்வையிட்டார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ததுடன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையிினரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு போலீசார் பராமரித்து வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அதேபோல் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை தேர்தல் காவல் பார்வையாளர் மாயங்க் வஸ்தவா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது காவலர்கள் பராமரித்து வரும் பதிவேடுகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், அணைக்கட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன், தாசில்தார் பழனி, டிஎஸ்பி மகேஷ் உட்பட வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Election Police Observer ,Vellore, Dam Assembly ,
× RELATED விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு...