தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 120 பேர் போட்டி

தூத்துக்குடி, மார்ச்23: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 120 பேர் போட்டியிடுகின்றனர். 4 தொகுதிகளில் 17க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மொத்தம் 130 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 10 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 120பேர் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி தொகுதியில் 26 பேரும், திருச்செந்தூர் தொகுதியில் 15 பேரும், வைகுண்டம் தொகுதியில் 21 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 பேரும், விளாத்திகுளம் தொகுதியில் 15 பேரும், கோவில்பட்டி தொகுதியில் 26 பேரும் களத்தில் உள்ளனர். ஒரு மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா ஆகியவற்றிற்கும் சேர்த்து 16 பெயர்கள் இடம்பெறும் அளவே உள்ளது. ஆனால் தற்போது மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் தலா 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த இரு தொகுதிகளில் ஒரு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.

தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் வைகுண்டம் ஆகிய தொகுதிகளில் 17க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Related Stories:

>