×

நீடாமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்படும்

மன்னார்குடி, மார்ச் 23: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளை யும் முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, தடுப்பணைகளை அமைப்பதோடு அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் என திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா உறுதியளித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம்எல்ஏ தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 3வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா நீடாமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுவூர் தென்பாதி ஊராட்சியிலிருந்து தனது 3ம் நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, கட்டக்குடி, பேரையூர், கருவாக்குறிச்சி, நல்லிக்கோட்டை, முக்குளம் சாத்தனூர், தளிக்கோட்டை உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட அனைவரையும் நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் டிஆர்பி ராஜா பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் வடுவூர் ஏரி, எடக்கீழையூர் ஏரி, எடமேலையூர் ஏரி, ஆலங்கோட்டை ஏரி, துளசேந்திரபுரம் ஏரி, மின்னல் ஏரி, பொன்னாங்கண்ணி ஏரி, அய்யம்பேட்டை ஏரி, வலுக்கை ஏரி, திருமேனி ஏரி உள்ளிட்ட ஏரிகளை முழுமையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, தடுப்பணைகள் அமைத்து அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் என்றார்.

பிரசாரத்தின்போது, தேர்தல் பணிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்எல்ஏ ஒரத்தநாடு ராஜமாணிக்கம், நீடா தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன் உள்ளிட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Needamangalam Union ,
× RELATED சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில்...