×

கலெக்டர் அறிவுறுத்தல் தஞ்சையில் சுதந்திர இந்தியாவின் வைரவிழா புகைப்பட கண்காட்சி

தஞ்சை, மார்ச் 23: தஞ்சை மணிமண்டபம் வளாகத்தில் சுதந்திர இந்தியாவின் வைரவிழா புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தொடங்கி ஆக.2022 வரை நடைபெற உள்ளது. அதையொட்டி நாடு முழுவதும் 75 வாரங்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தஞ்சை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தஞ்சை மணிமண்டபம் வளாகத்தில் சுதந்திர இந்தியாவின் வைரவிழா புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் கோவிட்&19 தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவ் வலியுறுத்தினார். இதையடுத்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி, இதற்கு தடுப்பூசி எவ்வளவு அவசியம் போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பார்வையாளர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் ஆனந்த பிரபு கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களின் வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் விவரம் போன்றவற்றை நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சீராளன், மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி வரும் 24ம் தேதி வரை நாளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இலவசமாக இக்கண்காட்சியை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector's Instruction Diamond Jubilee Photo ,Independent ,India ,Tanjore ,
× RELATED எனது ‘பலாப்பழம்’ சின்னம் சரியா தெரியலயே ஏன்? மன்சூர்அலிகான் வாக்குவாதம்