தா.பழூர் அருகே டூவீலர் மீது பஸ் மோதல் தாய் பலி, மகன் படுகாயம்

தா.பழூர், மார்ச் 23: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் வக்காரமாரி தெருவை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி பங்கஜம் (57). மகன் நடராஜன் (41). இந்நிலையில் பங்கஜம் நேற்று தனது மகன் நடராஜனுடன் மொபட்டில் பந்தநல்லூர் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு இருவரும் நேற்று மாலை வீடு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அணைக்கரை அடுத்த கோடாலி கருப்பூர் அருகே வந்தபோது சாலையின் வளைவு பகுதியில் வேகமாக வந்த தனியார் பஸ், இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பங்கஜம் பலியானார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த நடராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பங்கஜம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் இது போன்ற இரண்டு ஆபத்தான வளைவுகள் உள்ளதால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. மேலும் அப்பகுதி வயல்வெளிகள் அதிகமான பகுதி என்பதோடு மின்சாரம் இல்லாததால் வெளிச்சமின்றி இருண்டு கிடக்கிறது. இந்த வளைவுகளில் சூரிய ஒளியில் எரியக்கூடிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும். தொடர் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு வளைவுகளின் இரண்டு பக்கங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

More
>