×

ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேட்டில் தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சியில் இரண்டடுக்கு சுவர் கண்டெடுப்பு

ஜெயங்கொண்டம், மார்ச் 23: ஜெயங்கொண்டம் அருகே அகழ்வாராய்ச்சி பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தூய்மை பணிகள் முதற்கட்டமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் தொடங்கி களஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் 2020-21 ஆண்டிற்கான அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்று 7 மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அன்மையில் அறிவித்து இருந்தது.

அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மண்டி கிடக்கும் புல்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கி.மீ. சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு மேற்கொள்வதற்காக அப்பகுதிகளில் மண்டிக்கிடக்கும் புல் புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணிகளை தொல்லியல் துறை அலுவலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்.21ம் தேதியிலிருந்து ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தற்போது பணி மேற்கொண்டனர். பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டு அந்த இடத்தில் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் இரண்டடுக்கு சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Maligaimet ,Jayankondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது