×

மேலிட பார்வையாளர் ஆய்வு ஓட்டுக்கு மட்டும் காடுவெட்டி குரு வேண்டுமா? ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு

சென்னை, மார்ச் 23: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பொது மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்த வாழ குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலு. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பாமக கட்சியின் வழக்கறிஞராகவும் உள்ளார். பாமக கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த வைத்தி என்பவரை பாமக கட்சி வன்னியர் சங்க செயலாளராக மாற்றிவிட்டு அவர் வகித்த இடத்தில் மற்றொருவர் திருமாவளவன் என்பவரை நியமித்தனர். இதனால் கட்சியில் உட்பூசல் இருந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், திருமாவளவன் மற்றும் வைத்தி ஆகிய இருவரும் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பதவிக்கு பாமக கட்சியில் மனு தாக்கல் செய்தனர். பாமக கட்சியானது இருவருக்குமே சீட்டு கொடுக்காமல் தங்களது கட்சி வழக்கறிஞராக உள்ள ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாலு என்பவருககு ஒதுக்கியது. இதனால் வைத்தி சில நாட்களுக்கு முன்னர் தான் பாமக கட்சியை விட்டு விலகுவதாக இணையதளத்தில் தகவல் வெளியிட்டார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பாமகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. நடிப்புக்கு தான் மரியாதை உள்ளது. வன்னியர் சங்க செயலாளர் பதவி உள்பட பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாமகவில் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவுக்கு முக்கிய தளபதியாகவும், அவரது வலதுகரமாகவும் செயல்பட்டவர் வைத்தி. இவர் பாமகவின் மாநில துணைப் பொது செயலாளராகவும், வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். குருவின் மறைவுக்குப் பிறகு அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பாமகவினர் மத்தியில் அவரது செல்வாக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. அடுத்த காடுவெட்டி குரு ஆக முயற்சிக்கிறார் என்று அவரது எதிர்ப்பாளர்களால் குற்றம்சாட்டப்படும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2020 ஜனவரியில் நடந்த பாமக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, துணைப் பொதுச் செயலாளர் பதவி வைத்தியிடமிருந்து பறிக்கப்பட்டது.

வன்னியர் சங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடு, இனி மாநில வன்னியர் சங்க செயலாளராக மட்டும் வைத்தி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. வைத்தியின் வளர்ச்சியை தடுக்கவே, தலைமை இவ்வாறு செய்துள்ளது என்றும் அப்போது கட்சி தலைமை மீது குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது வைத்திக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது அதை உறுதிப்படுத்துகிறது என்றும் வைத்தி ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மஞ்சள் படை என்ற இயக்கத்தை துவக்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தில் வைத்தி சேர வாய்ப்பு உண்டு. மேலும் ஜெயங்கொண்டத்தில் சுயேட்சையாக கூட அவர் களமிறங்கலாம். அப்படி இறங்கினால், அந்த தொகுதியில் உள்ள வன்னியர்களின் ஒட்டு மொத்த ஆதரவும் இவருக்கு கிடைக்கும். இது தொடர்பாக வைத்தி தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்ற தகவல் பரவியது.
வைத்தி வெளியேறினால் பாலுவுக்கு பின்னடைவு ஏற்படும் என பாமக தலைமை அவரை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி, பாலுவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் மீண்டும் கட்சியில் சேர்ந்து பாலுவிறகு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறார். வழக்கறிஞர் பாலு என்பவர் பொதுமக்களிடத்தில் அதிகம் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் காடுவெட்டி குரு மீது சுமத்தப்பட்ட வழக்குகள் அனைத்திற்கும் இவரே ஆஜராகி இருந்தார்.

இதனால் மட்டுமே பாமக நிர்வாகிகளிடம் மட்டும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் பாலு கூட்டணி நிர்வாகிகளுக்கு கூட பழக்கம் இல்லாதவர். தற்போது பாமக நிர்வாகிகள் மற்றும் தனது சொந்தங்களை அழைத்து சென்று சொந்தங்களையும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். தான் ஜெயித்தால் வாழ குட்டை கிராமத்தில் தான் இருப்பேன் எனவும் இங்கேயே என்னை பார்க்கலாம் சென்னைக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறி வருவதாக கட்சியினர் கூறுகின்றனர். பாமகவினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் அதிகமாக அதிமுகவினர் கலந்து கொள்வது இல்லை எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பாமகவினர் தற்போது பிரசாரத்தில் காடுவெட்டி குரு பெயரை பயன்படுத்து வருகின்றனர். இவ்வளவு நாள் குரு அருமை தெரியவில்லையா? தேர்தல் வந்தால்தான் பாமகவுக்கு குருவின் அருமை தெரியுமா. இந்த தேர்தலில் பாலுவை தேற்கடிப்பதுதான் எங்கள் வேலை என அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துளனர். இதனால், பாலு அதிர்ச்சியில் உள்ளார்..

இன்னொருபுறம், காடுவெட்டி குரு மனைவி ஐஜேகே சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், காடுவெட்டு குரு ஆதரவாளர்கள் ஓட்டை பிரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பக்கம் அதிமுகவினர், பாமகவினர் எதிர்ப்பு, மறு பக்கம் குரு ஆதரவாளர்கள் எதிராக உள்ளது போன்ற காரணங்களால் பிரசாரம் முன்னெடுத்து செல்ல முடியாமல் பாலு தவித்து வருகிறார்.

Tags : Jayangondam Pamaka ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...