×

போலீசார் விசாரணை பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நிவேதாமுருகன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை, மார்ச் 23: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதாமுருகன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு நாளுக்குநாள் ஆதரவு பெருகிவருகிறது. நேற்றுமுன்தினம் மாலை செம்பனார்கோவில் காவல்நிலையம் எதிரே தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்துக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இதில் வேட்பாளர் நிவேதாமுருகன் பங்கேற்று பேசினார். இத்தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக, திமுக நேரடியாக மோதுவதால் திமுகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் அறிவித்தவுடன் திமுகவினர் தேர்தல்பணிகளை துவக்கியிருந்த நிலையில் தினந்தோறும் வாக்கு வேட்டை நடைபெற்று வருகிறது. நேற்று திறந்த வேனில் வேட்பாளர் நிவேதாமுருகன் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மதிமுக கொளஞ்சியப்பன் ஆகியோர் செம்பனார்கோவில் கஞ்சாநகரத்தில் வாக்குசேகரிக்க ஆரம்பித்து, மேலையூர், கருவாழக்கரை, நடுக்கரை, கீழையூர், முடிகண்டநல்லூர், கிடாரங்கொண்டான், தலையுடையவர்கோவில்பத்து, கருவி, குரங்குபுத்தூர், தலைச்சக்காடு கடைவீதி, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும் பள்ளத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டனர்.

செல்லும் இடமெல்லாம் வேட்பாளர் நிவேதாமுருகனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வேட்பாளர் நிவேதாமுருகன் பேசும்போது, திமுக அரசு அமைந்தவுடன் கொரோனா காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4,000 உடனடியாக அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இப்பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் தளபதியிடம் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு ஆட்சிப்பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

Tags : Poompuhar ,DMK ,Nivedamurugan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி