×

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு மாற்றுத்திறனாளிகள் கைப்பந்து போட்டி

தூத்துக்குடி,மார்ச்22: தூத்துக்குடியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. தூத்துக்குடி தருவை மைதானம் உள்விளையாட்டு அரங்கில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விaதமாக விளையாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது.  இப்போட்டியை கலெக்டர் செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். மேலும் போட்டியில்  வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை பரிசு வழங்கினார். 100 சதவீதம் வாக்களிப்போம் கையெழுத்து இயக்கத்தினை கையொப்பமிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் கையொப்பமிடுவதை பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில்:தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு அதிக அளவில் வெற்றி பெற்று பரிசு பெற்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பணிகளிலும் மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குசாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரேம்ப் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் வாக்குசாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு முறையை செயல்படுத்தியுள்ளது. 3000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆண்ட்ராய்டு ஆப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ஓட்டு போடும் நேரத்தினை அதில் தெரிவித்தால் அந்த தகவலானது வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு சென்றடையும்.

வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அதற்கு ஏற்றார்போல் தேவையான முன்னேற்பாடு செய்து வைப்பார்கள். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சி சப்-கலெக்டர் சதீஸ் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம். மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Transgender Volleyball Tournament ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு