×

நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

ஊட்டி,மார்ச்22: நீலகிரி மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது அதிகமாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சிறப்பு செலவின பார்வையாளர் அறிவுறுத்தி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜன் (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் பொது, செலவினம் மற்றும் காவல்துறை பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான செலவினம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நேற்று நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பணம், பரிசு பொருட்கள் கொண்டு சென்றது தொடர்பாக இதுவரை 101 வழக்குகளும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 25 வழக்குகளும் என 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாநில எல்லையோர மாவட்டம் என்பதால், கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர மாவட்ட கலெக்டர்கள், எஸ்பி.,களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, மதுபானங்கள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் மதுபானங்கள் கடைகள் உள்ளன. இதில் 36 கடைகளில் பார் வசதிகள் உள்ளன. 18 மதுக்கடைகள் பதற்றமான பகுதிகளில் அமைந்துள்ளன. 44 லைசென்ஸ் பெற்ற பார்கள், கிளப்கள் உள்ளன. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மதுபானங்கள் விற்பனை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 868 வாக்குசாவடிகளில் 112 பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளன, என்றார். தொடர்ந்து சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜன் பேசுகையில், தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலின் போது எந்த இடத்தில் அதிகமாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோ அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

நீலகிரி மாவட்டம் எல்லையோர மாவட்டமாக உள்ள காரணத்தால் குழுக்கள் அமைத்து மதுபானங்கள் ஏதும் கொண்டு வரப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் பொது பார்வையாளர்கள் ராகுல் திவாரி, பனுதர் பெஹரா, சவ்ரவ் பஹரி, செலவின பார்வையாளர்கள் விஷால் சனாப், அமர் சிங் நெஹ்ரா, காவல் பார்வையாளர் ரஞ்சித் சிங் மிஸ்ரா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோனிகா ரானா, ரஞ்சித் சிங், ராஜ்குமார், தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Nilgiris district ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்