கெம்பட்டி காலனி கழிவுநீர் கால்வாயை புனரமைக்க நடவடிக்கை

கோவை, மார்ச்  22:  கோவை தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று கெம்பட்டி காலனி, செட்டி வீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். வாக்காளர்களுக்கு தாமரை பூ வழங்கி, தனக்கு தாமரை சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அப்போது, வானதி சீனிவாசன் கடந்த தேர்தலில் தான் தோற்றபோதும் இந்த பகுதி மக்களை தேடி வந்து உதவி செய்து வருகிறேன். எனவே, வெற்றி பெற்றதும் கழிவுநீர் கால்வாயை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து அவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் ஒரு பெண் குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டியை வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர், அவரும் கைப்பந்து விளையாடினார்.

அவர் அந்த பகுதியில் சிலம்பம் பயிற்சி மேற்கொண்ட மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது உக்கடம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ஏ.கணேஷ், வார்டு செயலாளர் ஜெய்கணேஷ், பா.ஜ. மண்டல தலைவர் சேகர், மாநில செய்தி தொடர்பாளர் சபரி கிரிஷ், நிர்வாகிகள் வேலன், உதயகுமார், மோகனா, வேதவள்ளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>