×

திருவாரூர் அருகே பரபரப்பு சாலையை சீரமைக்க கோரி ஓஎன்ஜிசி வாகனத்தை மக்கள் சிறைபிடிப்பு

திருவாரூர், மார்ச் 21: திருவாரூர் அருகே சீனிவாசபுரம் என்ற இடத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் ஓஎன்ஜிசி வாகனத்தை சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் அருகே சீனிவாசபுரம் என்ற இடத்தில் இருந்து ஆறுமுகம் நகர் என்ற இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நகரின் உள்ளே ஏற்கனவே தார்சாலை இருந்து வந்தது. சாலையை அகலப்படுத்தும் பணிக்காக தார்ச்சாலையை அகற்றிவிட்டு செம்மண் சாலையானது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் போடப்பட்டது.

அதன் பின்னர் தார்சாலை அமைக்காததன் காரணமாக வாகனங்கள் செல்லும்போது செம்மண் புழுதி அனைத்தும் வீடுகளுக்குள்ளும் புகுந்து வீடு முழுவதும் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்திலும் படிந்து வருகிறது. அது மட்டுமின்றி அந்த பகுதியில் வசித்து வரும் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறலும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் பலமுறை தெரிவித்தும் தார்சாலை அமைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சிறைபிடித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் ஒஎன்ஜிசி நிறுவன உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தார்சாலை அமைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : ONGC ,Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...