திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூரில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் திமுக வேட்பாளர் பிரபாகரன் உறுதி

பாடாலூர், மார்ச் 21: தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளர் பிரபாகரன் தெரிவித்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் பிரபாகரன் ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் வீதி,வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். ஆலத்தூர் ஒன்றியம் மருதடி கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து திமுக வேட்பாளர் பிரபாகரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள மருதடி, விஜயகோபாலபுரம் நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், திருவிளக்குறிச்சி, ஊத்தங்கால், பாடாலூர் உள்ளிட்ட கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்குகள் சேகரித்தார். பாடாலூரில் வாக்கு சேகரித்தபோது வேட்பாளர் பிரபாகரன் பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ளார் தற்போது நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியால் எந்த ஒரு நன்மையும் நடைபெறவில்லை. திமுக சொல்வதை செய்யும். பாடாலூர் மக்களின் கோரிக்கைகளான அடி பள்ளத்து ஏரி தூர்வாரி சீரமைக்கப்படும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்தப்படும். எம்ஜிஆரநகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து பகுதி மக்களுக்கும் காவிரி நீர் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பேசினார். வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொறியாளர் பரமேஷ்குமார், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு.மதியழகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>