காவல் பார்வையாளர் தகவல் நாகை நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகை, மார்ச் 21:நாகை நகரம் என்பது நாகூர், நாகை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இவ்வாறு மிகப்பெரிய நகர எல்லையை கொண்ட நாகை நகர பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அரசு மேல்நிலைப்பள்ளி கிடையாது. இதனால் நாகை, நாகூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. நாகையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள திருமருகல், கீழ்வேளூர் ஆகிய பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஆனால் நகர பகுதியில் அரசு ஆண்கள் பள்ளி இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

இதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் பாஸ்கரன் கூறியதாவது: நாகை மாவட்டம் உலகளாவிய சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்குவதால் ஆண்டுதோறும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு விளைநிலம், மீன்பிடி தொழில் எல்லாம் பாதிக்கப்பட்டு இங்கு வசிக்கும் பொதுமக்கள் வறுமைகோட்டுக்குள் தள்ளப்படுகின்றனர். அதேநேரத்தில் தொழில் முன்னேற்றம் இல்லாத பின்தங்கிய மாவட்டமாகவும் நாகை உள்ளது.

ஏழ்மையில் வாழும் நாகை நகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது குழந்தைகளை மேல்நிலைக்கல்வி படிக்க வைக்க தனியார் கல்வி நிறுவனங்களையே நாடி செல்ல வேண்டியுள்ளது. நாகை நகர சுற்றுப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்க வேண்டும் என்றால் தனியார் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடி செல்ல வேண்டியுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளியில் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற முடியும். தனியார் பள்ளியாக இருந்தால் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதுமே ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்கு கிடைக்காது.

தனியார் பள்ளிகள் கேட்கும் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர், தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க பள்ளிகளுக்கு அனுப்பாமல் தன்னை சார்ந்துள்ள தொழில்களுக்கு அழைத்து செல்கின்றனர். எனவே நாகை நகர பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: