நாகூர் தர்கா குளம் தூர்வாருவதால் கடல்நீர் உட்புகும் அபாயம்

நாகை, மார்ச் 21: நாகூர் தர்கா குளம் அதிக ஆழமாக தூர்வாரப்படுவதால் கடல்நீர் உட்புகும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நிவர், புரெவி புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் நாகூரில் உள்ள புகழ்பெற்ற தர்காவுக்கு சொந்தமான தர்கா குளத்தின் தென்கரை மற்றும் கீழ்கரை பகுதிகளில் உள்ள சுவர்கள் 2020ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் சேதம் ஏற்படாமல் சீர் செய்யப்பட்டது.

நாகூர் தர்கா குளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 9ம் பார்வையிட்டார். அப்போது குளத்தை சீரமைக்க ரூ.5.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனவரி 24ம் தேதி அறிவித்தார். இதைதொடர்ந்து ரூ.4.37 கோடியில் நாகூர் தர்கா குளத்தை சீர் செய்யும் பணி மற்றும் ரூ.1 கோடியில் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 3ம் தேதி துவக்கி வைத்தார். பிப்ரவரி 12ம் தேதி நாகூர் தர்கா குளத்தின் நான்குபுற சுவர்களை புதுப்பித்து கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கியது.

இதற்காக குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குளத்தில் மீண்டும் தண்ணீர் வர தொடங்கியது. இவ்வாறு வந்த தண்ணீரையும் வெளியேற்றினர். குளம் தூர்வாரும் பணி நடந்து வருவதால் நாகூர் தர்கா குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கிணற்றின் நீர் குளத்துக்கு வந்து விடுகிறது. தொடர்ந்து குளத்தின் தண்ணீர் எடுக்கப்படுவதால் நாகூர் நகர பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த வருகிறது. அதேநேரத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல்நீர் உட்புகும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நாகூர் தர்கா குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு சுற்றுச்சுவரை கட்டும் பணியை துவங்கியிருக்க வேண்டும். இதை விட்டு குளத்தை தூர்வாரி அதில் இருக்கும் மணல்களை அள்ளுவதால் குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கிணற்றின் நீர் குளத்தின் உள்ளே வந்து விடுகிறது. இதன்காரணமாக நாகூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குளம் தூர்வாருவதற்கு முன் 15 நிமிடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி விடும். ஆனால் இப்போது 30 நிமிடம் தாண்டியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்புவதில்லை.

10 நிமிடம் கழித்தவுடன் தண்ணீர் இல்லாத காரணத்தால் மோட்டார் பழுதாகி நின்று விடுகிறது. இதேநிலை நீடித்தால் நாகூர் தர்கா குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல்நீர் உட்புகுந்து விடும். இதனால் நாகூர் நகர பகுதி முழுவதும் உப்புநீராக மாறி மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் கொடுக்காமல் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். கட்டுமான பணிகள் நிறைவு பெற்றவுடன் குளத்தில் தண்ணீரை நிரப்பும் பணியை செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories:

>