நெல்லை டவுனில் கரியமாணிக்க பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

நெல்லை, மார்ச் 21:   நெல்லை டவுனில் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.  நெல்லை டவுன் கரியாமாணிக்க பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது.  இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் காலை பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை பல்வேறு வாகனங்களில் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு வீதியுலா நடந்தது.

கடந்த 15ம் தேதி கருடசேவை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.  10ம் திருநாளான நேற்று விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி சுவாமி மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரமாகி தேரில் எழுந்தருளியதும் காலை 7.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரண்டுவந்து தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் சேரன்மகாதேவி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து மாற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சி நடந்தது.

Related Stories:

>