பாளை ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா

நெல்லை, மார்ச் 21:  பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில்  வேதநாராயணன், அழகிய மன்னார், ராஜகோபால சுவாமி கோயில் கலைநயத்துடன்  அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க இக்கோயிலில் வேதவல்லி, குமுதவல்லி  தாயார்களுடன் வேதநாராயணன் அருள்பாலித்து வருகிறார். தனித்துவமிக்க  இக்கோயிலில் ஆண்டுதோறும் ராஜகோபால சுவாமிக்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவ  திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி  இந்தாண்டுக்கான திருவிழா கொரோனா தடுப்பு வழிக்காட்டி விதிமுறைகளை பின்பற்றி  நேற்று காலை (20ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.

 இதையொட்டி  கடந்த 12ம் தேதி காலை 6.30 மணிக்கு ஸ்தம்ப பிரதிஷ்டை நடந்தது. நேற்று  முன்தினம் (19ம் தேதி) அங்குரார்ப்பணம், சேனை முதல்வர் விஷ்வக்சேனா  புறப்பாடு நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று (20ம் தேதி) காலை 7 மணிக்கு  மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி  நேற்று காலை சிறப்பு  அலங்காரத்தில் உற்சவர் ருக்மணி சத்யபாமா சமதே ராஜகோபாலர் ராஜ அலங்காரத்தில்  காட்சியருளினார். பின்னர் சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் மாடவீதி  ரத வீதியுலா நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் வேதமந்திரம் முழங்க  கொடியேற்றம்  நடந்தது. இதையொட்டி 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும்,  கோபுரம் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதை பெண்கள் உள்ளிட்ட  திரளானோர் தரிசித்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதும் வீதியுலா நடைபெறும்.  

இதேபோல்  திருவிழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு ராஜகோபால சுவாமி பல்லக்கில்  எழுந்தருளி மாடவீதி, ரதவீதிகளில் உலா வருவார். காலை 10 மணிக்கு சுவாமி  மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார தீபாராதனை, இரவு 7  மணிக்கு சிம்மம், அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில்  ராஜகோபால சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி இரவு 9  மணிக்கு இரு கருடசேவை நடக்கிறது. 10ம் நாளையொட்டி வரும் 29ம் தேதி   தோளுக்கினியானில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 7  மணிக்கு வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகே தாமிரபரணி  நதிக்கரையில் தீர்த்தவாரி நடைபெறும்.  ஏற்பாடுகளை இந்து சமய  அறநிலையத்துறையினர், திருக்கோயில் செயல் அலுவலர் சிவசங்கரி, தக்கார்  நல்லத்தாய், திருவிழா உபயதாரர்கள்,  ராஜகோபால் பஜனை குழுவினர் மற்றும்  பக்தர்கள் செய்துள்ளனர்.

Related Stories:

>