நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாழையூத்தில் பிரசாரம்

நெல்லை, மார்ச் 21:  அதிமுக கூட்டணியில் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாழையூத்து, சங்கர்நகர் பகுதிகளில் நேற்று வீதிவீதியாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் நெல்லை தொகுதியில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்தினர் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களைச் சந்தித்து மத்திய அரசு, மாநில அரசு சாதனைகள், திட்டங்களை விளக்கிக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

 இந்நிலையில் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட தாழையூத்து, சங்கர்நகர் பேரூராட்சி பகுதிகளான தாழையூத்து ஜெ.ஜெநகர், சங்கர்நகர், பாலிடெக்னிக் கல்லூரி பகுதி, பண்டாரக்குளம், தாதனூத்து, வடக்கு தாழையூத்து, தாழையூத்து மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவிதியாகவும், வீடுகள் தோறும் சென்று பிரசாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு மக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள் நடத்துவோர், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

 அப்போது நயினார்நாகேந்திரன் பேசுகையில், ‘‘மத்திய பாஜ அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதிமுக அரசும் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசிடம் பல நல்ல திட்டங்களை பெற்று செயல்படுத்தி வருகிறது. இதேபோல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ததால் சங்கர்நகர், தாழையூத்து பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுப்பேன்’’ என்றார்.

 பிரசாரத்தில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, தொகுதி பொறுப்பாளர் தயா சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, இளைஞர் அணி மருதுபாண்டியன், புல்லட்பாண்டியன், முருகபெருமாள், தாழை முருகன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், சங்கர்நகர் நகரச் செயலாளர் சங்கர், நாரணம்மாள்புரம் பேரூர் செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>