×

குமரிக்கு படையெடுக்கும் முக்கிய தலைவர்கள்

நாகர்கோவில், மார்ச் 21: குமரி மாவட்டத்துக்கு தேசிய மற்றும் பல முக்கிய தலைவர்கள் வர உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்ததை தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.  வேட்பாளர்கள் காலையிலேயே வாகன பிரசாரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு என பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முக்கிய தலைவர்களும் பிரசார களத்தில் இறங்கி உள்ளனர்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தக்கலையில் நேற்று பிரசாரம் செய்தார். அடுத்த வாரம் 2 வது கட்ட பிரசாரத்துக்காக மு.க.ஸ்டாலின் மீண்டும் குமரி மாவட்டம் வருவார் என கூறப்படுகிறது. கனிமொழி எம்.பி., திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும் வரலாம் என நிர்வாகிகள் கூறி உள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வர உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா, வரும் 26ம் தேதி குமரி  மாவட்டம் வருகிறார். 27ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்டம் வருகிறார்.

26ம் தேதி இரவு,நாகர்கோவில் வந்து தங்கும் முதலமைச்சர் 27ம் தேதி காலையில் கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 3ம் தேதி பிரதமர் மோடி, குமரி மாவட்டத்துக்கு வர உள்ளார். இது தொடர்பான பயண திட்டம் மற்றும் பொதுக்கூட்டம் இடம் இன்னும் முடிவாக வில்லை. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகளில் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள், நடிகர், நடிகைகளும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். இதனால் தேர்தல் பிரசார களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்துள்ளனர்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...