×

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் ரவுண்டிலேயே பாஜக வெளியேறி விடும் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகர், மார்ச் 21:விருதுநகர் கந்தசாமி மண்டபத்தில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனை ஆதரித்து  திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தங்கம்தென்னரசு பேசுகையில், ‘விருதுநகர் தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சட்டமன்ற கூட்டத்தில் தொகுதி பிரச்னைகளை ஒன்று விடாமல் எழுப்ப கூடியவர். வெட்டு தீர்மானத்தின் போது தொகுதி பிரச்னைகள் முழுவதையும் எழுதி கொடுத்து விடுவார். தாமிரபரணி குடிநீர் கிடைத்தற்கு காரணம் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தான். திமுகவின் வெற்றி, பிஜேபிக்கு எதிரான வெற்றி. மதவாதம் எந்த வடிவில் வந்தாலும் தமிழக மக்கள் ஓட, ஓட விரட்டி அடிப்பார்கள். 7 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும்’ என்றார்.

சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘சிவகாசி அமைச்சர் விருதுநகர் தொகுதியில் நிற்பதாக இருந்தது. மந்திரி வந்தால் நிறைய செலவழிப்பார், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்ற பயத்தில் சொன்னால் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ‘அப்படியா’ என கலங்காமல் இருந்தார். பிஜேபி நிற்கிறது என்று சொன்ன போதும் கலங்காதவர். சீனிவாசன் ஒரு ஆளுக்கு கூட தொந்தரவு செய்யாதவர், நன்மை மட்டும் செய்தவர், தீமை செய்யாதவர். இம்சை இல்லாத அரசியல்வாதி சீனிவாசன். சட்டமன்ற கூட்டத்தில் வாட்ச்மேன் வெளியே போங்கள் என சொல்லும் வரை உள்ளேயே இருந்து மக்களின் பிரச்னையை எடுத்துரைப்பார். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நாங்கள் தான் போராடி வாங்கினோம்.

விருதுநகரில் பிஜேபியை அடிக்கிற அடி, தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது. சீனிவாசன் வெற்றி ‘அன்லிமிட் டெட்’ வெற்றியாக இருக்க வேண்டும். வாக்குஎண்ணிக்கையின் போது முதல்ரவுண்டிலேயே பிஜேபி வெளியே போய்விடும். ஆதிக்க சக்திகள் தமிழகத்திற்குள் வரக்கூடாது என கூறும் அளவிற்கு பிஜேபியை தோற்கடிக்க வேண்டும்’ என்றார். ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் பேசுகையில், ‘எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் தொகுதி பிரச்னைகளை தீர்த்து வைத்திருக்கிறோம். மருத்துவக்கல்லூரியை மாவட்டத்தின் 4 திமுக எம்எல்ஏக்களும் போராடி கொண்டு வந்தோம். மாவட்ட தலைநகரில் கொண்டு வர வேண்டிய திட்டங்கள் ஏராளம் இருக்கிறது. திமுக ஆட்சி வந்ததும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்’ என்றார். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், பாலகிருஷ்ணசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம், மதிமுக மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Sathur Ramachandran ,BJP ,Virudhunagar ,
× RELATED அண்ணாமலை 10,000 ஓட்டு கூட வாங்க மாட்டார்...