×

விருதுநகர் மாவட்ட 7 தொகுதிகளில் 172 மனுக்கள் ஏற்பு 87 மனுக்கள் தள்ளுபடி

விருதுநகர், மார்ச் 21: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மார்ச்.12 துவங்கி 19ம் தேதி வரை 207 வேட்பாளர்கள் 259 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனையில் குறைபாடுகள் இருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டு, தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கப்பட்ட மனுக்கள் விபரம் வருமாறு: விருதுநகர் தொகுதியில் 26 வேட்பாளர்கள் 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 11 மனுக்கள் தள்ளுப்படி செய்யப்பட்டன. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக), பாண்டுரங்கன் (பாஜக), எம்.தங்கராஜ் (அமமுக) உட்பட 20 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

அருப்புக்கோட்டை தொகுதியில் 31 வேட்பாளர்கள் 41 வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சாத்தூர் ராமச்சந்திரன்(திமுக), வைகை செல்வன் (அதிமுக), ரமேஷ் (தேமுதிக) வேட்பாளர் உட்பட 30 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.திருச்சுழி தொகுதியில் 27 வேட்பாளர்கள் 31 வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 10மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தங்கம் தென்னரசு (திமுக), ராஜசேகர் (மூவேந்தர் முன்னனி கழகம்), சிவசாமி (அமமுக) உட்பட 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.சாத்தூர் தொகுதியில் 35 வேட்பாளர்கள் 40 வேட்புமனுக்கள்  தாக்கல் செய்திருந்த நிலையில், 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ரகுராம்(மதிமுக), ரவிச்சந்திரன்(அதிமுக), ராஜவர்மன்(அமமுக) உட்பட 27 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சிவகாசி தொகுதியில் 33 வேட்பாளர்கள் 45 மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  அசோகன்(காங்), லட்சுமி கணேசன்(அதிமுக), சாமிகாளை (அமமுக) உட்பட 31 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.திருவில்லிபுத்தூர் தொகுதியில் 27 வேட்பாளர்கள் 38 மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மாதவராவ் (காங்கிரஸ்), மான்ராஜ் (அதிமுக), சந்தோஷ்குமார் (அமமுக) உட்பட 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ராஜபாளையம் தொகுதியில் 26 வேட்பாளர்கள் 31 மனுக்கள் தாக்கல் செய்திருந்திருந்தனர். அவற்றில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தங்கப்பாண்டியன் (திமுக), ராஜேந்திர பாலாஜி (அதிமுக), காளிமுத்து (அமமுக) உட்பட 20 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மாவட்டத்தின், 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 207 வேட்பாளர்கள் 259 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 36 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் மற்றும் கட்சியினர் கூடுதலாக தாக்கல் செய்த 52 மனுக்கள் என 87 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 172 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனு வாபஸ் பெற மார்ச்.22 கடைசி நாள், அன்றைய தினமே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Tags : Virudhunagar district ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்