மதுரை, மார்ச் 21: மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்வும், அதிமுக மாநில அமைப்புச் செயலாளருமான முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முத்துராமலிங்கம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் அதிமுகவைச் சேர்ந்த அவனியாபுரம் மேற்கு பகுதி செயலாளர் கருணாநிதி, இலக்கிய அணி தலைவர் ரகுராமன், துணைத்தலைவர் யோகேஷ் உள்ளிட்ட சுமார் 100 பேர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.
அப்போது முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா, மாநில நிர்வாகி கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். கடந்த 1996 தேர்தலில் திமுக எம்எல்ஏ,வாக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிமுகவில் இணைந்து 2011ல் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக முத்துராமலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.