×

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து இதுவரை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1883 புகார்கள் உடனே விசாரிக்க கலெக்டர் உத்தரவு

திண்டுக்கல், மார்ச் 21: திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 1883 புகார்கள் குறித்து உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புகுழு, வீடியோ பார்வைக்குழு, வீடியோ கூர்ந்தாய்வுக்குழு, கணக்குக்குழு என பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தேர்தல் பணியில் உள்ள வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மைய அறையில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து புகைப்படம், வீடியோ ஆதாரம் மூலமாக புகார்களை பதிவு செய்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அல்லது மிரட்டல் விடுத்தல் தேர்தல் குற்றமாக கருதப்படுகிறது. எனவே இச்செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாது எனவும், இம்மாதிரி செயல்கள் பற்றி தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக தேர்தல் கட்டுபாட்டு மைய அறை இலவச எண் 1950 மற்றும் 1804250210. 0451-2460505, 0451 2460506, 10451-2460507, 14512460508 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் VIGIL மொபைல் ஆப் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் இதுவரை 1833 புகார்கள் வந்துள்ளன. அதில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பாக 7 புகார்கள், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 18 புகார்கள், வாக்காளர் பட்டியல் விசாரணை தொடர்பாக 1801 புகார்கள் வரப்பெற்றுள்ளன. அத்தனை புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Dindigul ,Election Control Room ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...