புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி ஊட்டி பாஜ வேட்பாளரை எதிர்த்து பிரசாரம் விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு

ஊட்டி,  மார்ச் 21: பாஜ போட்டியிடும் ஊட்டி தொகுதியில் நீலகிரி விவசாயிகள்  மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் எதிர்த்து பிரசாரம் செய்ய  போவதாக அறிவித்துள்ளனர். நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற  சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:  மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி டெல்லியில் ஏராளமான  விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் 100  நாட்களை கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில்  பாஜ போட்டியிடும் தொகுதிகளில் எதிர்ப்பு பிரசாரம் செய்வதாக பல்வேறு  விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. அதேபோன்று மத்திய அரசை கண்டித்து பாஜ  போட்டியிடும் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் நீலகிரி விவசாயிகள் மற்றும்  தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் எதிர் பிரசாரம் செய்ய முடிவு  செய்துள்ளோம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர்கள் செக்சன் 17 நிலத்தில் வசித்து  வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை வழித்தட  நிலம் 515 ஏக்கர் என்று கூறிய நிலையில், அதனை 7 ஆயிரம் ஏக்கராக மாற்றியதை  ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை வழித்தட ஆய்வு குழுவில் உள்ள  பிரவீன் பார்கவா உள்ளிட்ட 2 பேரை குழுவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>