எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் திமுக வேட்பாளர் நா. கார்த்திக் பிரசாரம்

கோவை, மார்ச் 21: சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் பிரசாரத்தை துவக்கினார். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் நா.கார்த்திக், எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை நேற்று துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: எஸ்பி.வேலுமணியின் உள்ளாட்சித்துறை சார்பில் கோவை மாநகரத்திற்கும் இந்த தொகுதிக்கும் எதுவும் செய்யப்படவில்லை. மேம்பாலங்கள் கட்டுவது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றில் தரமற்ற பொருட்களை கொண்டு பணிகளை செய்து கோடி கணக்கில் கொள்ளையடித்து விட்டார்.

 திமுக ஆட்சி காலத்தில், மக்களுக்கு பயன்படும் வகையில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் ரயில்வே கடவு மேம்பாலம் கட்டப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படாததால், அந்த மேம்பாலம் கிடப்பில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு தீர்வு காணப்படும். இதேபோல், மோசமான சாலைகள், குடிநீர் பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அவை சரி செய்யப்படும். அதிமுக சொத்து வரியை உயர்த்தியது, திமுக சார்பில் போராட்டம் நடத்திய பிறகு அவை நிறுத்தி வைக்கப்பட்டது.

மக்களை ஏமாற்றி வரும் அதிமுகவிற்கு பாடம் புகட்டும் நாள் ஏப்ரல் 6-ம் தேதி ஆகும். அனைவரும் மறவாமல் உதயசூரியனுக்கு வாக்களித்து திமுக தலைவர் தளபதியை அரியணையில் ஏற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, நீலிகோணம் பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள பிரசனைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரசாரத்தின் போது, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்ஆர்.மோகன்குமார், கொங்கு தனபால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>